இந்த உலகம் ஒரு நாடகம்; இங்கு ஒவ்வொருவரும் ஒரு பாத்திரம். ஆனால், உன் வாழ்வின் கதையை நீதான் எழுத வேண்டும், அதற்கான சிற்பியாகவும் நீயே இருக்க வேண்டும். எதற்கெடுத்தாலும் அடுத்தவரை நம்பி வாழ்வது, கடலில் மிதக்கும் படகுக்குக் கயிறு கட்டிக் கரைசேரக் காத்திருப்பது போல. காற்றின் போக்கிலேயே படகு அடித்துச் செல்லப்படும்; நம் இலக்கை ஒருபோதும் அடைய முடியாது.
நம்மில் நிறையபேர் சிறு வயதிலிருந்தே பெற்றோரையும், ஆசிரியர்களையும், நண்பர்களையும் நம்பி நம்பியே வாழப் பழகிவிடுகிறோம். இது ஒரு வகையில் வசதியாகத் தோன்றினாலும், நீண்ட காலப் போக்கில் நம் சுய சிந்தனையையும், சுய முடிவெடுக்கும் திறனையும் மழுங்கடித்துவிடும்.
ஒரு சிறிய உதாரணம்:
பள்ளி நாட்களில் தேர்வு எழுதுவதற்கு நண்பனின் உதவியை நாடினால், நமக்குக் கிடைக்கும் மதிப்பெண் அந்த நண்பனின் உழைப்பு; நம் அறிவல்ல. இது ஒரு தொடக்கம் மட்டுமே. வேலைவாய்ப்பு, திருமணம், அதுமட்டுமில்லாமல் ஏன் அன்றாட வாழ்க்கையின் எல்லா விஷயங்களுக்கும் அடுத்தவரின் கருத்தையே நாடும் பழக்கம் வந்துவிடும் என்பதில் அய்யம் இல்லை.
வாழ்க்கையில் நமக்கு சவால்கள் வரும்போது, அதற்கான தீர்வை நாமே தேட வேண்டும். பிறர் நமக்கு வழி காட்டலாம், ஆலோசனை வழங்கலாம். ஆனால், இறுதி முடிவு உன்னுடையதாக இருக்க வேண்டும். உதாரணத்திற்கு, ஒரு வியாபாரம் தொடங்க நினைக்கிறாய். உன்னுடைய நண்பனோ அல்லது உறவினரோ “அது லாபமாக இருக்காது” என்று சொல்லக்கூடும். அவர்களின் வார்த்தைகளை மட்டுமே நம்பி உன்னுடைய கனவை விட்டுவிட்டால், ஒருவேளை அந்த வியாபாரம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தால், நீ அதைப் பறிகொடுத்ததற்கு நீயே பொறுப்பாவாய்.
சுயசார்பு என்பது சும்மா கிடைக்கும் சுதந்திரம் அல்ல; அது உழைப்பால் பெறப்படும் வலிமை. உன் காலில் நீ நிற்கும் போதுதான், உலகின் உயரமான சிகரங்களைக்கூடத் தொடும் தைரியம் உனக்கு வரும். உன்னுடைய சந்தோஷத்திற்கோ, துக்கத்திற்கோ, வெற்றி தோல்விகளுக்கோ பிறரைச் சார்ந்திருக்காதே. ஒவ்வொரு மனிதனும் தனிப்பட்ட திறமைகளையும், தனிப்பட்ட சிந்தனைகளையும் கொண்டவன்.
அதைப் புறந்தள்ளிவிட்டு அடுத்தவரை நம்பி வாழும் போது, நீ உன்னையே இழக்கிறாய்.
இன்றே தொடங்கு! சின்னச் சின்ன விஷயங்களில் உன்னுடைய முடிவுகளை நீயே எடு. தவறுகள் வரலாம்; அதிலிருந்து கற்றுக்கொள். அதுதான் உன்னுடைய அனுபவப் பாடம். உன் வாழ்வின் திசையை நீயே தீர்மானி. உன்னுடைய வலிமையையும், திறனையும் நீயே கண்டறி. பிறரை நம்பி வாழ்வதை விட, உன்னுடைய பலம் உன்னை வழிநடத்தும் போது, உன் வாழ்க்கை மிகவும் அர்த்தமுள்ளதாக மாறும்.
