நாகப்பட்டினம் மாவட்டத்தில், கடற்கரையின் ஓரத்தில் அமைந்திருக்கும் ஒரு சிறிய கிராமம் அது. அந்த கிராமத்தில் ரொம்ப நாளா நிரப்பப்படாம இருக்கிற அந்த இயற்பியல் ஆசிரியர் பணிக்கு மோகன் என்ற இயற்பியல் ஆசிரியர் பணியில் நியமிக்கப்பட்டார். மோகன் மதுரையில் படித்துவிட்டு, தமிழ்நாடு அரசின் ஆசிரியர் தகுதி தேர்வில் நல்ல மதிப்பெண்ணில் தேர்ச்சி பெற்றவர். மாணவர்களுக்காக தனது வாழ்நாளில் ஏதாவது செய்யணும் அப்படின்னு ஆசை கொண்டவர். அதனாலே மாணவர்களால் மிகவும் விரும்பும் ஆசிரியர்களில் முதலிடத்தில் இருப்பார்.
காரணம், அவர் பாடம் நடத்துவது மட்டுமின்றி, வாழ்க்கை எப்படி வாழ வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுத்தார். நல்ல மனிதன் என்பவர் நல்ல பழக்கங்களைக் கடைபிடிப்பவன் என்பது இவரின் முக்கிய கடமை. மிகவும் எளிமை, நேரம் தவறாமை, சிறந்த திட்டமிடல், நேர்மை மற்றும் கடமை உணர்வுடன் விடா முயற்சியும் இவரின் நல்ல பண்புகளில் குறிப்பிடத்தக்கவை.
அந்தப் பள்ளியில் கவின் என்பவன் இருந்தான். அவன் அந்தப் பள்ளியில் வேலை செய்யும் கண்ணையா என்பவரின் மகன்தான். மகனுக்கு எப்போதும் எல்லாவற்றிலும் எல்லாமே எளிதில் கிடைக்க வேண்டும், எல்லாவற்றிலும் எளிதில் வென்று விட வேண்டும், என்பதை அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார். அதில் ஒரு பெருமிதம். நல்ல புத்திசாலிதான்; இருந்தாலும் கடின உழைப்பில் அவனுக்கு சிறிதும் விருப்பமில்லை.
ஒரு நாள் அரையாண்டு தேர்வு வந்தது; மாணவர்கள் அனைவரின் முன்னிலையிலும் ஆசிரியர் எச்சரித்தார். அனைவரும் அதிக மதிப்பெண் பெறுவதை விட, எவ்வளவு உழைத்து நேர்மையாக எழுதிருக்கிறீர்கள் என்பதே மிகவும் முக்கியம் என்று. அனைத்து மாணவர்களும் அவரின் வார்த்தைகளை தங்களின் மனதில் பதித்துக் கொண்டனர். கவின் அதனை பெரிதாக எடுத்துக்கொண்ட மாதிரி இல்லை;
ஒரு நாள் தேர்வும் வந்தது, மாணவர்கள் அனைவரும் தகுந்த தயாரிப்புடன் தேர்வை எதிர்கொண்டனர். ஆனால் கடின உழைப்பில் நாட்டமில்லாத கவின், விடைகளை எழுதி ஒரு சிறு துண்டு காகிதத்தை தன் பையில் மறைத்து வைத்துக்கொண்டு, “நான் என்ன பெரிய தவறா செய்கிறேன்? ஒரு துண்டில் எல்லாம் என்னவாகிப் போகிறது?” என்று தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக்கொண்டு, இருந்தான். யாரையும் ஏமாற்றவில்லை; தன் கைதான் தனக்கு உதவி என்பது இதுதான் என்ற தவறாக எண்ணிக்கொண்டான். பாதி தேர்வு முடிந்ததும் கவின் எழுதிக் கொண்டிருந்தான். மோகன் ஆசிரியர் தன் மேஜையிலிருந்து எழுந்து நடக்கத் தொடங்கினார். மோகன் ஆசிரியரைப் பார்த்ததும் பதட்டத்தில் பேப்பரை மறைக்க முயன்ற கவினின் சிறு காகிதத் துண்டு கீழே விழுந்து மாட்டிக்கொண்டான்.
கீழே விழுந்த காகிதத் துண்டை மெதுவாக குனிந்து எடுத்தார். கோபம் இல்லை, ஆனால் ஒருவித ஏமாற்றம். கவினால் எதுவும் பேச முடியாமல், தலை குனிந்தான். இந்த தேர்வை எழுத வேண்டாம்; நேர்மையுடன் எழுதினால் அடுத்த தேர்வை எழுதுமாறு கூறி, கவினை வெளியில் சென்று அமரச் சொன்னார். எல்லோரும் கவினையே பார்த்தனர். கவின் அவமானமாக உணர்ந்தான். அவனின் மனதில் ஒரு பெரிய வலி. அந்த நாள் முழுவதும் யாருடனும் பேசவில்லை. வீட்டில் சென்றும், அமைதியாக இருப்பதைக் கண்ட கவினின் தாய் என்ன என்று கேட்டு நடந்தவை எல்லாத்தையும் அறிந்து கொண்டார்கள். நீ உன் தவறை உணர்ந்தால், நன்று என்று கேட்டார். ஆமாம் என்று தலையாசைத்தான்.
அடுத்த நாளே பள்ளிக்குச் சென்று மோகன் ஆசிரியரிடம் கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டான். ஆசிரியரும் அவன் தவறை உணர்ந்ததால் மன்னித்து, அறிவுரை கூறி அனுப்பினார். அன்றிலிருந்து கவின் குறுக்கு வழிகளைத் தேடாமல், நேர்மையாக வரும் எல்லா தேர்வுகளையும் எதிர்கொண்டான். ஆசிரியர் அவனைத் தண்டிக்கவில்லை; அவன் தவறை உணர்த்தி, நல்வழி காட்டினார். எல்லா தவறுகளுக்கும் தண்டனைதான் தீர்வு என்று இல்லை; நேர்மைக்கும் கடமைக்கும் இடையில் கண்ணியமாக செயல்பட்ட ஆசிரியர் நான்தான்.
– ஜான்.